News Just In

4/02/2021 07:34:00 PM

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்!!


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்ட கூட்டத்திற்கு எங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கடந்த 23ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்குபற்றி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கூறியிருந்தார்கள்.ஆனால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமூகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.

பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார்.யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும்.

அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மேலாக தொலைபேசியூடாக எங்களை வரவேண்டாம் என்று சொல்லுமளவிற்கு அரசாங்க அதிபரிற்கு அழுத்தம் கொடுத்த போலி முகங்களை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறுவாரா என்பதை கேட்க விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அமைச்சர்களிற்கு பக்கத்தில் சென்று உட்கார்ந்திருக்க வேண்டும், அவர்கள் கூட்டத்திலே பரிமாறும் சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும், அதன் மூலம் வெளிவருகின்ற புகைப்படங்கள்,பிரசாரங்கள் மூலமாக எங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அந்தக் கூட்டங்களில் பங்குபெறுவதில்லை.

அமைச்சர் என்பவர் குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது குறிப்பிட்ட இனத்திற்கோ சொந்தமானவரல்ல. முழு நாட்டிற்கும் உரித்தானவர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பிலே அதிகூடிய பெரும்பான்மையை பெற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றோம்.

நாங்கள் இப்படியான கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை காண்பதற்காகவே இப்படியான கூட்டங்களுக்கு செல்கின்றோம்.

கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது ஆமாம் சாமி போட்டுக்கொண்டு அரசாங்கத்திற்கு கூஜா தூக்குகின்றவர்களைப்போல நாங்கள் அங்கு இருப்பதில்லை.

மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது அவ்விடயம் பத்திரிகைகளில் வரும்போது தங்களுக்கு அவமானமாக இருக்கும் என நினைத்துத்தான் அரசாங்க அதிபருக்கு இப்படியான அழுத்தங்களை கொடுக்கின்றார்களா என்பது தெரியவில்லை.

அரசாங்க அதிபர் இப்படியான அரசியல்வாதிகளுக்கு கைப்பொம்மையாக இருக்காமல் மாவட்ட அபிவிருத்தியை கருத்தில்கொண்டு அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களுக்கு அழைத்தால்தான் எமது மாவட்டத்தையும் மக்களையும் முன்னேற்றக்கூடியதாக இருக்கும்.

இப்படியான அரசியல்வாதிகள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையிலே இவர்கள் அத்தனைபேரின் முகங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டு இருப்பதற்காக இப்படியான கூட்டங்களுக்கு செல்வதில்லை என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும்.
இம்மாவட்ட மக்களினால் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படும்போது எங்களுக்கு வாக்களித்த அத்தனை வாக்காளர்களையும் நீங்கள் ஒதுக்குவதாகவே நாங்கள் கூறுவோம்.

எதிர்வரும் காலங்களில் மாவட்ட அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் மாவட்ட மக்களையும் மாவட்டத்தின் முன்னேற்றத்தையும் கருதி செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.

No comments: