News Just In

4/19/2021 05:20:00 AM

உயர்தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிப் பகுதியில் வெளியாகும்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!!


கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை (19) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அமைவாக ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த எண்ணிக்கை அல்லது அதற்குக் குறைவான மாணவர்களை கொண்ட வகுப்புக்களில் உள்ள மாணவர்களை நாளாந்தம் பாடசாலைக்கு அனுமதிக்க முடியும் என்று தெரிவித்த செயலாளர், 30 மாணவர்களைக்கொண்ட வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டாக பிரித்து அதாவது 15 மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

30 மாணவர்களுக்கும் அதிகமானால் அந்த வகுப்பு மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து, பாடசாலைக்கு அனுமதிப்பது கட்டாயமாகும். சுகாதார விதிமுறைகளை பேணி பாடசாலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பமாகவுள்ளன.

தொழில்நுட்ப பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிவியல், மொழி மற்றும் புவியியல் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் முகாமைத்துவ பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த பீடங்களின் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்தினம் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் உதய ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: