News Just In

4/21/2021 07:52:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு - 2 நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு!!


இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள் , நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தாக்குதல்களால் உயிரிழந்தவர்கள் , அங்கவீனமடைந்தவர்கள் , தமது உறவுகளை இழந்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட சகலருக்காகவும் நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

இதன் போது முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற நேரமான காலை 8.45 க்கு சகல தேவாலயங்களிலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

2 நிமிட மௌன அஞ்சலி

2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் காலை 8.45 க்கு முதலாவது குண்டு வெடிப்பு சம்பவம் பதிவானது.

எனவே அதே நேரத்தில் சகல தேவாலயங்களிலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. கத்தோலிக்க மக்கள் மாத்திரமின்றி நாட்டிலுள்ள சகல மக்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு கத்தோலிக்க ஆயர் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

கொச்சிக்கடை திருத்தல ஆராதனை

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்றைய தினம் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆராதனைகளில் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளதோடு , அவரால் புனித பாப்பரசரின் சார்பில் அறிவிப்பும் விடுக்கப்படவுள்ளது.

அத்தோடு ஏனைய நாடுகளின் தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்க்பபட்டுள்ளது. மேலும் இவ் ஆராதனைகளில் ஓமல்பே சோபித தேரர் , ஹஸன் மௌலவி மற்றும் கொச்சிக்கடை இந்து ஆலய குருக்கள் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கட்டுவாப்பிட்டி

கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இன்றை தினம் மாலை விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

இதன் போது அங்கு குண்டு வெடிப்பில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு சின்னம் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திறந்து வைக்கப்படவுள்ளதோடு , மேரி ஸ்டெல்லா பாடசாலை மைதானத்திலிருந்து விசேட மத பேரணியொன்றும் இடம்பெறவுள்ளது.

விசேட பாதுகாப்பு

கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெறவுள்ள ஆராதனைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் , சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் , பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஆலோசனையும் வழங்கியுள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொச்சிக்கடை திருத்தல வளாகத்தில் போக்குவரத்து மட்டுப்பாடு

கொச்சிகடை புனித அந்தோனியர் திருத்தலத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு கொச்சிகடை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணி முதல் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து மட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான மாற்று வீதிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments: