News Just In

3/22/2021 03:10:00 PM

தெரிவு செய்யப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கான WTBF இன் விசேட உதவி திட்டம்!!


WTBF கனடா கிளையினுடாக கல்விக்கான அமைப்பு கனடா நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற இந்த உதவி கனடா கல்வியமைப்பால் தெரிவு செய்யப்பட்ட 04 மாவட்டங்களிற்கு WTBF இன் மாவட்ட அபிவிருத்தி குழு மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

WTBF கனடாக் கிளை உறுப்பினரும், கல்விக்கான அமைப்பு கனடாவின் நிர்வாக உறுப்பினருமாகிய திரு.யோகா அவர்களது தீவிர முயற்சியின் பலனாக இந்த உதவித் திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களே இந்த உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறக் கூடியதாக இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களுக்கும் இது போன்ற உதவிகள் கிடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களான அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகியவற்றுக்கான விளையாட்டு உபகரணங்கள், அந்தந்த மாவட்ட அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதற்கான நிதி அனுசரணையை FBM GROUP- CANADA, கல்விக்கான கனடாவின் அமைப்புக்கு வழங்கியிருந்தது.

முதற்கட்டமாக இந்த நிகழ்வு BDBA இன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி நிர்வாகத்தினரால் தலைவர் திலக்ஷன் தலைமையில் BDBA உள்ளக விளையாட்டு அரங்கில் 21.03.2021 அன்று வெகுசிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பூப்பந்தாட்ட விளையாட்டுக்குரிய உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கல்வி அமைப்பு கனடா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசில்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர்.

WTBF இனால் வருடா வருடம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டிகள் பயிற்சி பட்டறைகளில் பங்குபற்றி பூப்பந்தாட்ட துறையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய அதேவேளை 2019ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் WTBF இன் கனடாக் கிளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் அந்தந்த மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவர்களுக்கு அந்த மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக அனைவருக்கும் உதவி கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

விளையாட்டுத் துறையிலும், கல்வித் துறையிலும் வீரர்களை ஊக்குவித்தல், தேசிய மட்டத்தில் வீரர்களை சாதிக்க செய்தல், போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இச்செயற்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதை உணர்ந்து கல்வித் துறையில் சாதிக்கும் அதேநேரம் விளையாட்டுத் துறையிலும் தமது ஆர்வத்தைச் செலுத்தி சாதனை படைக்கும் மாணவர்களுடன் உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை உறுதுணையாக பயணிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த இரு நிகழ்வுகையும் ஒழுங்கமைத்து நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தினர் ( BDBA ) தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.











No comments: