News Just In

3/18/2021 07:59:00 AM

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகள் வெளியீடு!!


இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று குறியீட்டுடன் நேற்று முதற்தடவையாக வெளியிடப்பட்டது. இந்த முத்திரை தொடர்பாக அல்லது இது தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் ரூ. 500 பெறுமதியுள்ள பாதுகாப்பு அடையாளத்துடன் புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் இங்கு வெளியிடப்பட்டது.

இந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எமது நாட்டு வரலாற்றில் 1857ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதலாவது முத்திரை வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தபால் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

No comments: