News Just In

3/22/2021 08:29:00 AM

சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசின் சிந்தனைகளுக்கு மாறாக செயற்படுகின்றார்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!!


தற்போதுள்ள அரசாங்கமானது, தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறாத அரசாங்கமென்பதால் சில அரசியல்வாதிகளும் அதிகாரம்படைத்த அதிகாரிகள் சிலரும் அரசின் சிந்தனைகளுக்கு மாறாக செயற்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் அன்மையில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தியைமை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தை அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சியை தடுத்துநிறுத்தியமை, தீவகத்தின் சில தீவுப்பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுக்கு வழங்கியமையை இடைநிறுத்தியமை தொடர்பாக வினவப்பட்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை. இதனால் இந்த அரசாங்கத்தின் கொள்கை ஒரு பேரினவாதத்தை ஊக்குவிக்கின்ற அல்லது பேரினவாதிகளின் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற கொள்கையாக இருக்குமென நினைத்துக்கொண்டு சில அரசியல்வாதிகளும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலம்முதல் இன்றுவரை நான் மூன்று விடயங்களை வலியுறுத்திவருகிறேன். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டுமாகவிருந்தால் நாங்கள் தேசிய நீரோட்டத்தில் பங்கெடுக்கவேண்டும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கலந்துகொள்ளவேண்டும் அத்தோடு தேசிய நல்லிணக்கத்தோடு செயற்படவேண்டும் என்பதே அவையாகும்.

ஆனால் அன்றைக்கு இருந்தவர்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் எனது கருத்து எதிரான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு கருத்தையும் செயற்பாட்டையுமே கொண்டடிருந்தார்கள். ஆனால் இன்று எமது மக்களும் நாடும் சர்வதேசமும் எது சரி எது பிழை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

அந்தவகையில் எனது தேசிய நல்லிணக்க அரசியல் ஒரு வலுவான நிலையில் இருப்பதனால் எமது மக்களை பாதிக்கின்ற ஒரு பிரச்சினை வருகின்றபோது அதனை நான் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்கின்றபோது அதற்கு தீர்வு கிடைக்கின்றது.

அந்தவகையில்தான் இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்த முடிந்ததோடு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தை அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சியையும் நிறுத்தமுடிந்தது.
அத்தோடு, தீவுப்பகுதிகளில் சீன நிறுவனத்தால் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை இடைநிறுத்த முடிந்ததும் இந்த தேசிய நல்லிணக்க அரசியல் மூலமாகத்தான் எனக்குறிப்பிட்டார்.

No comments: