News Just In

3/23/2021 02:05:00 PM

தலைமை உரையும் உறுப்பினர் உரையும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாததால் ஏறாவூர் நகர சபையில் சலசலப்பு உறுப்பினர்கள் வெளி நடப்பு!!


ஏறாவூர் நகர சபையின் 36வது அமர்வு அச்சபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை 23.03.2021 சபா மண்டபத்தில் கூடியபோது நிகழ்ச்சி நிரல் சம்பந்தமான குழப்ப நிலை ஏற்பட்டது.

சபையின் நிகழ்ச்சி நிரலில் வழமையாக இடம்பெற்றிருக்கும் தலைமை உரையும் உறுப்பினர் உரையும் உள்ளடக்கப்படாததால் பெரும்பாபாலான உறுப்பினர்கள் இது விடயமாக கேள்வி எழுப்பினர்.

தங்களது அக்கறை கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதால் உறுப்பினர்கள் பலர் சபை அமர்வில் கலந்து கொள்வதில்லை எனக் கூறி வெளி நடப்புச் செய்தனர்.

இதனால் சிறிது நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

வெளியேறிச் சென்ற அதிருப்தியாளர்களான முன்னாள் சபைத் தலைவர் தற்போதைய பிரதித் தவிசாளர் உட்பட இன்னும் சில உறுப்பினர்களிடம் தவிசாளர் எழுந்து சென்று சாந்தமாகப் பேசி மீண்டும் உறுப்பினர்களை சபைக்குள் கொண்டு வந்தபொழுது சபை நடவடிக்கைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்தன.

உள்ளுராட்சி மன்றங்களின் சம்பிரதாயப்படி சபைத் தலைவரின் தலைமை உரையுடனும் பின்னர் உறுப்பினர்களின் உரையுடனும் இடம்பெறுவதுண்டு.

இந்த இரண்டு விடயங்களும் நீக்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரதிநிகளின் குரல் இதுபோன்று உள்ளுராட்சி மன்றங்களிலும் மாகாண சபைகளிலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க முடியாமற் செய்யப்படலாம் என்பதாலேயே தான் இந்த விடயத்தில் சீற்றமடைந்ததாக ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான இறம்ழான் அப்துல்வாஸித் வாதிட்டார். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்தைக் கூற முடியாத நிலையில் இது எதிர்கால சபை நடவடிக்கைகளுக்கும் உள்ளுராட்சி மன்ற சம்பிரதாயத்திற்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த சபைத் தலைவர் நழீம் சபையோரின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க இனி வரும் அனைத்து சபை அமர்வுகளிலும் தவிசாளர் தலைமை உரையும் உறுப்பினர்கள் உரையும் இடம்பெறும் என்பதனை தீர்மானமாகக் கொண்டு வருகிறோம் என்றார்.

இந்த விடயம் சபையோரால் ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டது.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)








No comments: