இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் எனக் குறிப்பிடப்படும் முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், தான்தோன்றி ஈஸ்வரம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான நாளாகப் போற்றப்படுகிறது மகா சிவராத்திரி. இந்த நாளில், சிவ பக்தர்கள் கடைப்பிடிக்கக் கூடிய மிக முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம் என்கின்றனர் சிவனடியார்கள்.
சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும், கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.
மாதந்தோறும் சிவராத்திரி விரதம் மேற்கொள்வது என்பதே மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் தொலையும். கர்ம வினைகளெல்லாம் நீங்கும்.
அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகா சிவராத்திரி நாளில், விரதம் இருந்தால், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்களும் நாம் தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். முக்கியமாக, முக்திப் பேறு அடையலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
மனிதர்களுக்கு மிகவும் தேவையானது என இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள். உணவு, தூக்கம் என்கிற இரண்டும் மிக மிக முக்கியம். . இந்த இரண்டையும் விலக்கி, சிவபெருமானுக்காக மகாசிவராத்திரி நாளில் விரதமிருப்பதுதான் இந்த நாளின் நோக்கம். விரதத்தின் தாத்பரியம். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போதுதான் இறையுணர்வில் நாம் முழுவதுமாக லயிக்கமுடியும். அப்படியான கடவுள் சிந்தனையே முக்தியைத் தரவல்லது என்கிறார்கள் சிவனடியார்கள்.
அதுமட்டுமா? உணவை விடுப்பதும் தூக்கம் துறப்பதுமாக இருந்து, பக்தியில் திளைத்திருந்தால், காரியம் அனைத்தும் வீரியமாகும். செயல்களில் தெளிவு பிறக்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.
ஜனாதிபதியின் சிவராத்திரி தின செய்தி
உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தி
மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.



No comments: