News Just In

3/21/2021 07:28:00 PM

உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம்- இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க முதலாவது இடத்தில்!!


உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது.

குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.

இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்களின் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வு செய்துள்ள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளள்ளது.

குறித்த ஆய்வுகளின் குறியீட்டில் 100 புள்ளிகளில் 82 புள்ளிகளைப் பெற்றுள்ள சீனா உலகின் வலிமையான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளதாக மிலிட்ரி டைரக்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மிகப்பெரிய இராணுவ வல்லமையைக் கொண்டுள்ளதாக கருதப்படும் அமெரிக்காவுக்கு 74 புள்ளிகளே கிடைத்துள்ளன. அத்துடன், ரஷ்யாவுக்கு 69 புள்ளிகளிலும், இந்தியாவுக்கு 61 புள்ளிகளும் பிரான்ஸிற்கு 58 புள்ளிகளும் கிடைத்துள்ளன. அத்துடன், ஒன்பதாவது இடத்திலுள்ள இங்கிலாந்துக்கு 43 புள்ளிகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க முதலாவது இடத்தில் உள்ளதுடன் அந்நாடு, ஆண்டுக்கு 732 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

அத்துடன், 261 பில்லியன் டொலருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 71 பில்லியன் டொலருடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேவேளை, ஒரு மோதல் ஏற்படுமானால், சீனா கடல் மூலமாகவும், அமெரிக்கா விமானம் மூலமாகவும், ரஷ்யா தரை மூலமாகவும் வெல்லும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கான 14 ஆயிரத்து 141 போர் வானூர்திகளையும் ரஷ்யா நான்காயிரத்து 682 வானூர்திகளையும் சீனா மூவாயிரத்து 587 வானூர்திகளையும் கொண்டுள்ளன.

மேலும், ரஷ்யா 54 ஆயிரத்து 866 போருக்கான வாகனங்களையும் அமெரிக்கா 50 ஆயிரத்து 326 வாகனங்களையும் சீனா 41 ஆயிரத்து 641 வாகனங்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, கடலில் சீனா 406 போர்க் கப்பல்களையும் ரஷ்யா 278 போர்க் கப்பல்களையும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன 202 போர்க் கப்பல்களையும் கொண்டுள்ளதாக குறித்த இணையத்தள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: