News Just In

3/28/2021 02:08:00 PM

தனது கட்சியின் எம்.பிக்களை பொதுவெளியில் விளாசி தள்ளினார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்!!


நாடுமுழுவதிலும் இருந்து வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் போட்டிபோட்டுக்கொண்டு சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவை இல்லாமல் வாய் உழறி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அங்கும் இங்குமாக இப்போது தலைவரையும் வம்புக்கு இழுக்கின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை நான் நன்றாக அறிந்துள்ளேன். இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் போக்கை அறிந்து வைத்துள்ளேன். கட்சியை பல தடவை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் இவர்களே என 20க்கு ஆதரவளித்த தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்(கள்) தொடர்பில் பகிரங்கமாக பேசினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.

சனிக்கிழமை (27) காலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் குழுமத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியாளர்களுடன் வாய்திறப்பதில்லை, யாரையும் தேவையில்லாமல் மலினப்படுத்தவும் இல்லை. பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கிறது. பிராந்திய ரீதியான பிரச்சினை, அவர்களுடைய அரசியல் தொடர்பிலான பல சிக்கல்கள் இருக்கலாம். அதைப்பற்றி தாராளமாக தெரிந்தவன், புரிந்து கொண்டவன் என்ற அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் யாரையும் அவசரப்பட்டு கட்சியை விட்டு விரட்ட விரும்புவதில்லை. அவர்களாகவே அவர்களை விரட்டக்கூடிய நிலைமையை உருவாக்காமல் இருப்பது நல்லது. சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. இப்போது புதிய எஜமானர்களை கண்டதும் அதனையெல்லாம் மறந்துவிட்டார்கள் என்றார்.

இந்நிகழ்வில் மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரைத்தவிர பெரிதாக யாரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

(மாளிகைக்காடு நிருபர்)






No comments: