News Just In

3/24/2021 02:48:00 PM

ஐநா தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் கருத்து ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போன்றது-தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் - பா.உ கோ.கருணாகரம்!!


ஐநா வில் இலங்கைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேறியிருக்கின்றது. இந்த நேரத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ‘தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இலங்கை அரசு மாறி மாறி விடும் பிழைகளினால் இன்று சர்வசத்தின் முன் அவமானப்பட்டு நிற்கின்றது. இந்த நிலைமைக்கு தமிழர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ காரணமல்ல. இதற்கு முற்றுமுழுதான காரணம் இந்த அரசும், அதனைப் பிரதிநித்துவப் படுத்துபவர்களுமேயாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற உறப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தாலும் நேற்றைய தினம் இலங்கைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேறியிருக்கின்றது. 47 வாக்களிக்கத் தகைமையுடை நாடுகளில் 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் 14 நாடுகள் நடுநிலைமை வகித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற அடிப்படையில் 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தால் ஏனைய நாடுகள் அந்தப் பிரேரணைக்கு எதிரானது தானே என்று காட்ட முற்படுகின்றார். இதிலிருந்து ஒன்று தெளிவாக விளங்குகின்றது. இலங்கை அரசும், அதன் அமைச்சர்களும் இன்னும் ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்று.

இந்த வாக்கெடுப்பிலே இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் பல நாடுகளை திரை மறைவில் இருந்து இயக்கிய இந்தியா இந்தப் பிரேரணை வெற்றி பெற வேண்டும், இலங்கையிலே சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்களுக்குப் பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய இந்தியா இந்தப் பிரேரணையில் நடுநிலை வகித்தது என்பது உண்மையிலே ஈழத்தமிழர்களை வேதனக்குள்ளாக்கியிருக்கின்ற விடயமாகவே தமிழர்கள் உணர்கின்றார்கள்.

இந்த ஐநா பேரவை ஆரம்பித்தது முதல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான சரத் வீரசேகர, விதுர விக்கிரமநாயக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் மிகவும் துவேசான கருத்துக்களையும், இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்த நாடுகளுக்கு எதிராகவும் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இறுதிக் கட்டத்திலே இவர்கள் வாய்பொத்தி மௌனிகளாக ஆக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்ல நான் அறிந்த வகையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்தக் கூட்டத் தொடரிலே பங்குபற்றியவர்கள் இங்கு இவர்களுக்கு தங்களது கருத்துக்களை அடக்கி வாசிக்கச் சொன்னதாகவும் அறியக் கிடைத்தது. அதாவது அந்தப் பிரேரணையின் கனதியையும், அதனைக் கொண்டு வந்த நாடுகளின் கனதியையும் அறிந்து இவர்கள் அடக்கி வாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இடம்பெறப் போகும் துரதிஸ்டவசமான சம்பவங்களை நிறுத்தவதற்காக இந்தத் துவேசங்களைக் கக்கிக் கொண்டிருந்த அமைச்சர்களை அடக்கி வாசிக்கச் செய்ததும், அவர்கள் அடக்கி வாசித்ததும் எமக்குச் சாதகமாகவே அமைந்தது.

தற்போது வெளியுறவு அமைச்சர் மாகாணசபைத் தேர்தல் சம்மந்தமாகவும், பதின்மூன்றாம் திருத்தம் சம்மந்தமாகவும், அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாகவும் பேசுகின்றார் என்றால் இந்தத் தீர்மானத்தின் விளைவே அது என்பதை நாம் உணருகின்றோம். மனித உரிமைக் கூட்டத்தொடர் முடிவற்றதும் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதைப் போன்று கதைப்பார்கள் என்பதும் யாம் அறிந்த விடயமே. இருப்பினும் இலங்கை இந்தப் பிரேரணையை, இலங்கைக்கெதிராக சர்வதேசம் கொண்டுள்ள நிலைமையைப் புரிந்து நடக்கும் என்று நினைக்கின்றேன்.

பொத்தவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான எமது பேரணி தொடர்பில் அரசின் நடவடிக்கை அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது. இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும், சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தவதற்காக பொலிஸ் நிலையங்களுடாக வாக்குமூலங்கைளப் பெற்று நீதிமன்றத்தின் முன் இவர்களை நிறுத்த முனையும் செயற்பாடுகளும் அராஜகமான செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஏனெனில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல் ரீதியான ஜனநாயகப் போராட்டங்கள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடைபெற்றக் கொணடிருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமை வேண்டி இந்தப் பேரணியை நடாத்துவதை விரும்பாமல் அவர்களளை அச்சுறுத்தவதென்பது இந்த நாடு ஒரே சட்டம் ஒரே நாடு என்ற கோட்பாட்டின் கீழ்தான் இருக்கின்றதா? என்ற கேள்வியே எழுகின்றது.

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தான் சுற்றாடல் பாதுகாப்பான், வனவளத்தைப் பாதுகாப்பவன், இயற்கையைப் பாதுகாப்பவன், நாட்டை நேசிப்பவன் என்று கூறுகின்றார். நான் உண்மையில் அந்த வார்த்தைகளை விரும்புகின்றேன். ஆனால், செயல்வடிவத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு ஒரு தடவை வரவேண்டும் என்பதை விரும்புகின்றேன், வேண்டுகோள் விடுக்கின்றேன். மட்டக்களப்பிற்கு அவர் வரவேண்டும். மட்டக்களப்பின் வனவளம் எவ்வாறு அத்துமீறப்படுகின்றது, சேனைப்பயிர்ச்செய்கை என்ற போர்வையில் எவ்வாறு காவுகொள்ளப்படுகின்து, இந்த மாவட்டத்தின் கனிம வளங்களான இல்மனைட், மண்வளங்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது, எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அத்திப்பட்டி கிராமமாக மாறும் சூழ்நிலை இருப்பதை ஜனாதிபதி இங்கு வந்து பார்வையிட வேண்டும். இந்த மண் கொள்ளையர்கள் செய்யும் அநியாயத்தைப் பார்க்க வேண்டும். இந்த அரசின் அடிவருடிகளாக சில அரச அதிகாரிகள் செயற்பட்டு இந்த மாவட்ட வளங்களை அழிப்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் அவற்றைத் தடுத்து நிறத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போதூன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பர். அவ்வாறன்றி ஒரு பிரதேசத்தின், ஒரு இனத்தின் ஜனாதிபதியாக மாத்திரம் இருக்கக் கூடாது என்பது எங்கள் வேண்டுகோள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கோ, சிங்களவர்களுக்கோ எதிரானது அல்ல. இந்த நாட்டை நேசிக்கும் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்த நாட்டிற்குள்ளே தமிழ் மக்கள் சுதந்திரமாக, சுயநிர்ணயமாக வாழ்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். முழு அதிகாரப் பரவலை வேண்டி நிற்கின்றார்கள். நாங்கள் எமது மக்கள் இந்த நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழக் கூடாது, சமத்தவத்துடன் வாழ வேண்டும் என்று நேசிப்பவர்களே ஒழிய இந்த நாட்டிற்கோ, சிங்களத்திற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அரசியல் ரீதியான ஒரு தீர்வையே வேண்டி நிற்கின்றது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தான் இந்த நாட்டை சீரழிவுக்குள் கொண்டு செற்றிருக்கின்றது. 

யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டும் என்று சொல்வதைப் போல இலங்கை அரசு மாறி மாறி விடும் பிழைகளினால் இன்று சர்வசத்தின் முன் அவமானப்பட்டு நிற்கின்றது. இந்த நிலைமைக்கு தமிழர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ காரணமல்ல. இதற்கு முற்றுமுழுதான காரணம் இந்த அரசும் இந்த அரசைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்களுமேயாகும். இன்று பந்து உங்கள் பக்கம் இருக்கின்றது. அதனை நீங்கள் தடுத்தாட வேண்டும் என்று நினைத்தால் பாரதூரமான விளைவுகளைச் சந்திப்பீர்கள். அந்தப் பந்தை நன்றாக அடித்து விளையாடுவீர்கள் என்றால் இந்த நாடு சுபீட்சமாக எதிர்காலத்திலே ஒரு வளம்மிக்க நாடாக மாறும் என்பதை இந்த அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: