News Just In

3/15/2021 09:57:00 AM

திருக்கோவில் பிரதேச பின்தங்கிய கிராமங்களின் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினார்- பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன்!!


(டினேஸ்)
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம், பாலக்குடா, காயத்திரி கிராமம் ஆகிய பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனுடன் சந்திப்பினை மேற்கொண்டு பிரதேச விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச்சந்திப்புகள் இடம்பெற்றன.

முதலில் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கசேவலாயுதபுரம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மீனவர் சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெளிவுபடுத்தினர்.

பிரதேசத்தில் வலதுகரை வாய்க்கால் அமைப்பு, யுத்ததால் புலம்பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படாமை, இரண்டு லெட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் அறைகுறையில் இருக்கின்றமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் நிலைமை, சுயதொழில் ஊக்குவிப்புச் செயற்திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெரியப்படுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் திருக்கோவில் காயத்திரி கிராமம் மற்றும் பாலக்காடு போன்ற பிரதேசங்களின் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கு முகமான உவித் திட்டங்கள், சுயதொழில் ஊக்குவிப்புகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றன தொடர்பில் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயங்கள் தொடர்பிலாக உரிய அமைச்சுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், வாலதுகரை வாய்க்கால் தொடர்பில் மாகாண திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆவன செய்வதோடு, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.











No comments: