News Just In

3/23/2021 09:50:00 PM

இலங்கையில் நாள் ஒன்றிற்கு 9 தொடக்கம் 10 பேர் வரை விபத்துக்களால் உயிரிழப்பு!!


இலங்கையில் வீதி விபத்துக்களால் நாளாந்தம் 9 முதல் 10 பேர் உயிரிழக்கின்றனர். அதற்கமைய நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
திங்களன்று இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 6 மரணங்கள் திங்களன்று இடம்பெற்ற விபத்துக்களின் போதும், ஏனைய 3 மரணங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களின் போதும் ஏற்பட்டவையாகும்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் மூவரும் , மோட்டார் சைக்கிள்களில் சென்ற மூவரும் , பயணிகள் மூவரும் உள்ளடங்குகின்றனர். தற்போது நாளொன்றுக்கு வீதி விபத்துக்களால் 9 - 10 பேர் உயிரிழப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதற்கமைய வருடத்திற்கு சராசரியாக சுமார் 3,650 பேர் விபத்துக்களால் உயிரிழக்கக் கூடும்.

சாரதிகள் மற்றும் பாதசாரிகள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு வீதி பாதுகாப்புடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments: