News Just In

3/13/2021 05:18:00 PM

பிரதமர் தலைமையில் 'பேருந்தில் எதிர்காலத்திற்கு' திட்டத்தின் இரண்டாம் கட்டம்- 20 பாடசாலைகளுக்கு பேருந்து நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டது!!


போக்குவரத்து பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை நூலகங்களாக மீள புதுப்பிக்கப்பட்டு நூலகங்கள் அற்ற பாடசாலைகளுக்கு வழங்கும் 'பேருந்தில் எதிர்காலத்திற்கு' திட்டத்தின் இரண்டாம் கட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2021.03.12) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அதற்கமைய 20 மாவட்டங்களில் நூலக வசதியற்ற 20 பாடசாலைகளுக்கு இவ்வாறு பேருந்து நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

'பேருந்தில் எதிர்காலத்திற்கு' திட்டத்தின் முதலாவது கட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 01 சிறுவர் தினத்தன்று செயற்படுத்தப்பட்டது. அன்றைய தினம் 5 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு பேருந்து நூலகங்கள் வழங்கப்பட்டன.

பிரதமரின் தலைமையில் 20 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளுக்கு இவ்வாறு பேருந்து நூலகங்கள் வழங்கப்பட்டதுடன், 25 மாவட்டங்களுக்கு இந்த எண்ணக்கருவிற்கமைய பேருந்து நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.

வாசிப்பு என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். அதன் மூலம் பிள்ளைகளுக்கு சமூக, பொருளாதார, அரசியல் அறிவை பெற்றுக்கொள்ள முடியும். இது பிள்ளைகளை வாசிப்பிற்கு பழக்குவதற்கு உந்துததலாக அமையும். நாம் இன்றைய சூழலுக்கு பொருத்தமான புத்தகங்கள் மற்றும் இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகள் இரும்பிற்காக விற்பனை செய்த நிலையே காணப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் அவ்வாறான பேருந்துகள் கடலில் போடப்பட்டன. இ.போ.ச. ஊழியர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து பாவனையில் இருந்து நீக்கப்படும் பேருந்துகள் முழுமையான நூலகங்களாக மாற்றப்படுகின்றன. நூலக வசதியற்ற பாடசாலைகளுக்கு நாம் இப்பேருந்துகளை பெற்றுக் கொடுக்கிறோம். அதில் இலவச இணைய வசதியும் உள்ளடங்குகிறது. மேலும் 34 பேருந்துகள் இதுவரை இதேபோன்று புதுப்பிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இப்பேருந்து நூலகங்களை குறியீட்டு ரீதியாக வழங்கி வைத்த பிரதமர், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பாடசாலை நூலக பேருந்தொன்றின் நாடாவை வெட்டி திறந்து வைத்து, நூலக வடிவமைப்பு மற்றும் புத்தகங்களை ஆய்வு செய்தார்.

போக்குவரத்து அமைச்சின் அனுசரணையில், இலங்கை போக்குவரத்து சபை, எஸ்.எல்.டி மொபிடெல் மற்றும் இலங்கை தேசிய நூலகம் மனுசத் தெரனவுடன் இணைந்து 'பேருந்தில் எதிர்காலத்திற்கு' திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, மாகாண ஆளுநர்களான டிகிரி கொப்பேகடுவ, அனுராதா யஹம்பத், ராஜா கொள்ளுரே, ரொஷான் குணதிலக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, தேசிய நூலக சபையின் தலைவர் சொனால குணவர்தன உள்ளிட்ட நூலக பேருந்து வழங்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








No comments: