ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்று வருகிறது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்று இரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என என அவர் இதன்போது தெரிவித்தார்.
அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் தெரிவித்தார்.
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பொறுப்புவாய்ந்த ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை திறந்த மற்றும் செயற்றிறன்மிகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments: