ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வாழைச்சேனை மீனவர்கள் மூவரும் நேற்றிரவு (19) தங்களது வீடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பகுதியிலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற சீ.பீ.ஹயாத்து முகம்மது (40 வயது), அசனார் வெள்ளத்தம்பி (55 வயது ), எம்.எம் நவ்பர் (37 வயது) ஆகிய மூன்று மீனவர்களுடன் படகு ஒன்று காணாமல் போனது.
மூவருடன் கடலுக்குச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் தத்தளித்த போது படகு திசைமாறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நான்கு நாட்களாக யாருடைய உதவியுமின்றி நாங்கள் கடலில் தத்தளித்தோம் நாங்கள் டோர்ச் லைட் சமிக்கை செய்தும் எங்களை சில படகுகள் கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்தும் நாங்கள் சமிக்கை செய்து கொண்டே இருந்தோம் அப்போது ஒரு படகில் வந்தவர்கள் எங்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சேர்த்தனர் என்று உயிர் தப்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தங்களை காப்பாற்றி மாத்தறை துறைமுகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து நாங்கள் வாகனம் ஒன்றின் மூலம் நேற்றிரவு எங்களது வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம் என்று மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கடலில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த எங்களை காப்பாற்றி குடும்பத்துடன் சேர்த்த ஹம்பாந்தோட்டை மீனவர்களுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments: