News Just In

11/23/2020 04:02:00 PM

மாவீரர் நாள் அனுஷ்டிக்க தடை கோரிய மனுவை போலீசாரே திரும்ப பெற்றனர்!!


மாவீரர் தினத்திற்கு தடைகோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.

மாவீரர்தினத்திற்கு தடைகோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிசார் வழக்கு தாக்கல் செய்ய மனு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் உள்ளிட்டோரை பிரதிவாதியாக குறிப்பிட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தாவுடன், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், கே.சுகாஷ், என்.சுஜீவன், சந்திரசேகரம், குகதாஸ் ஆகியோரும் முன்னிலையாகினர்.

இதன்போது சமர்ப்பணம் செய்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, குற்றவியயல் சட்டக்கோவை 106 இன் கீழ் இந்த தடை உத்தரவை பெற முடியாது, அதற்கு சட்ட அடிப்படை கிடையாது என மன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், பொதுத்தொல்லைகள் கட்டத்தின் கீழ் வேறு விவகாரங்களே கையாள முடியும், இது நினைவேந்தல் தொடர்புடையது என குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதாரமாக இலங்கை, இந்திய உயர்நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை சான்றாக சுட்டிக்காட்ட முடியுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே இந்த சட்ட பிரிவை பொலிசார் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறார்கள், சில நீதிமன்றங்களின் ஊடாக தடை செய்துள்ளனர். இந்த விடயத்தில் திட்டவட்டமான முடிவொன்றை எட்ட வேண்டுமென அவர் மன்றில் வலியுறுத்தினார்.

இந்நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, இந்த விவகாரத்தில் பொலிசார் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினரை முன்னிலையாகுமாறும், அவ்விதம் அவர்கள் ஆஜரானால் இரு தரப்பு வாதங்களின் பின் நீதிமன்றம் திட்டவட்டமாக முடிவை அறிவிக்கலாமெனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தாம் கலந்தாலோசிக்க வேண்டுமென பொலிசார் தெரிவித்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

20 நிமிடங்களின் பின்னர் வழக்கு மீள எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கை மீளப்பெறுவதாக குறித்த 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் அறிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதி 3 வழக்குகளையும் மீளப்பெற உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்டது.

குறித்த பத்திரத்தை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம் குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு திகதியிட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் பெறப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் பெறப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினரால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments: