News Just In

11/22/2020 11:34:00 AM

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கின்றதா?- கமீலா பானு!!


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி அது தொடர்பான பல விமர்சனங்கள் ஊடகங்களினூடாக வெளிவந்த வண்ணமே உள்ளன. 

இப்பரீட்சையினால் எத்தனை வீதமான பிள்ளைகள் நன்மையடைகின்றார்கள்? பிள்ளைகளின் ஆளுமையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருகின்றது? அப்பரீட்சையின் நோக்கம் அடையப் பெற்றதா? எனப் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன. 

பரீட்சைக்குத் தோற்றிய மொத்தப் பிள்ளைகளில் 10 வீதமான பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெறுகின்ற வகையிலேயே பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மீதி 90 வீதமான பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்கு கீழேயே புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். 

70 புள்ளிகள் பெற்றால் சித்தி பெற்றதாகக் கருதப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறில்லை. பெற்றோர்கள் தமது பிள்ளை வெட்டுப்புள்ளியைப் பெறாதபோது ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தமது பிள்ளைகளை குறைகூறுகின்றனர். சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தண்டனை வழங்குவதனால் அவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகளிடத்து தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதாகவும் கற்றலில் வெறுப்பு ஏற்படுவதாகவும் உளவியலாளர்களும் புத்திஜீவிகளும் உளநல மருத்துவர்களும் கூறுகின்றனர். 

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற பிள்ளைகளே பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் பாராட்டப்படுகிறார்கள். ஏன் வலயக்கல்வி அதிகாரிகள், கல்விசார் உத்தியோகத்தர்கள் கூட அப்பிள்ளைகளைத்தான் பாராட்டுகின்றனர். போதாததற்கு அரசியல்வாதிகள் வேறு. இவ்வாறான செயற்பாடுகளினால் வெட்டுப் புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். 

இவ்வாறான பாதிப்புக்கள் பற்றி பெற்றோர்களும் அதிகாரிகளும் அறிவார்களா? உளவியலாளர்களும் புத்திஜீவிகளும் உளநல மருத்துவர்களும் இப்பரீட்சையினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதாகவும் இப்பரீட்சையை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும் நீண்டநாளாக தமது வாதங்களை முன்வைத்து வந்தாலும் துரதிஷ்டவசமாக வருடாவருடம் இப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது. 

பிள்ளைகளை முறைத்துப் பார்ப்பது கூட சிறுவர் துஷ்ப்பிரயோகம் எனப் பட்டியலிட்ட சிறுவர் அமைப்புக்கள் கூட 5ஆம் தர புலமைப் பரீட்சையினால் இவ்வாறு பாரதூரமாக பிள்ளைகள் பாதிக்கப்படுவதை ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன எனப் புரியவில்லை. 

வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உதவிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரபல பாடசாலைகளில் கல்வியைத் தொடருவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இப்புலமைப்பரிசில் பரீட்சையானது பெற்றோர்களின் கௌரவத்தையும் கல்வி வலயங்களின் பெருமையையும் பறைசாற்றுகின்ற ஓர் ஆயுதமாக மாறியிருப்பது கவலையளிக்கின்றது. 

க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வெட்டுப்புள்ளிகளைப் பெற்றால்த்தான் பல்கலைக்கழகம் புகமுடியும். ஆனால் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை அவ்வாறில்லை. பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் ஏன் பரீட்சைக்குத் தோற்றாவிட்டாலும் 6ஆம் தரத்திற்கு வகுப்பேற்றப்பட்டு அவர்களால் கல்வியைத் தொடரமுடியும். 

இது இவ்வாறிருக்கையில் புலமைப் பரிசில் பரீட்சை என்ற போர்வையில் ஏன் எமது பிள்ளைகளின் சுதந்திரத்தை நாமே பறித்து அவர்களைத் துன்புறுத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றோம்? புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களது புகைப்படங்களினாலும் அவர்களுக்கான வாழ்த்துக்களினாலும் முகநூல் முழுவதுமாக நிரம்பியிருந்தது. சித்தியடையாத பிள்ளைகளையும் அவர்களது பெற்றோர்களையும் நாம் எண்ணிப்பார்த்தோமா? சில பெற்றோர்கள் தமது கவலை, கோபம், ஏமாற்றம் போன்றவற்றை தம் பிள்ளைகளிலேயே வெளிப்படுத்தினார்கள். 

பிரபல பாடசாலைகளிலும் தேசிய பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரச ஊழியர்களது பிள்ளைகளாகும். பரீட்சையில் சித்தியடைந்தாலும் இவர்களுக்கு உதவிப் பணம் கிடைக்கப்போவதில்லை. மேலும் பிரபல பாடசாலைகளிலேயே இவர்கள் கல்வி கற்பதனால் அதுவும் தேவையில்லை. கல்வி அமைச்சு இப்பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அறிவித்துவிட்டது. 

இவ்வாறிருக்க வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய சந்தர்ப்பங்களை நாம் ஏன் இல்லாது செய்துவிடுகின்றோம். சற்று சிந்தித்துப்பார்ப்போம். நாம் எமது போலி கௌரவங்களை தக்கவைப்பதற்காக எமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளங்களை பாழ்படுத்துகின்றோம். சுதந்திரத்தையும் சந்தோசத்தையும் இப்பிள்ளைப்பருவத்தில் அனுபவிக்காமல் எப்போது பிள்ளைகள் அனுபவிப்பது? பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் எத்தனை வீதமான பிள்ளைகள் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்? என்பதையும் இப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களெல்லாம் பல்கலைக்கழகம் செல்கின்றார்களா? என்பதையும் பகுப்பாய்வு செய்துபாருங்கள். 

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் வெறும் 2 வீதமானவர்களே ஆகும.; மீதமுள்ள 98 வீதமானவர்களும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெறாதவர்கள்தான் என ஒரு ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? மேலும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் எல்லோரும் இப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களா? பிள்ளை மையமாக சிந்தித்துப்பாருங்கள். 

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை என்பது முக்கியமானதொரு பரீட்சை இல்லை என்பதும் அவர்கள் வயதிற்கும் பருவத்திற்கும் பொருத்தமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரியும். 

                                            "நற்பிரஜைகளை உருவாக்குவோம்"

No comments: