News Just In

5/01/2020 09:30:00 AM

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

மே தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள 
வாழ்த்துச் செய்தி
நாடு முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்து வரும் எமது உழைக்கும் மக்களுக்கு - எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு நாளைய சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒரு சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றேன்.

வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும்.

கடந்த காலத்தின் இடர்நிறைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் - கொரோனா நோய்த்தொற்றையும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி.

சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை, பலம் மற்றும் புரட்சிப் பண்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். உலகில் இன்று ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று காரணமாக முழு உலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இம்முறை அந்த வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.

எனினும், மிகவும் சிறந்த, நேரிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு அவர்களிடமுள்ள திடவுறுதி மாற்றமின்றி தொடர்ந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.

எமது அரசாங்கமானது, எத்தகைய நெருக்கடி மிகுந்த நிலைமையிலும் கூட - எமது நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைய இடமளித்ததில்லை. அத்தகைய நிலைமைக்கு இனிமேலும் நாம் இடமளிக்கப் போவதுமில்லை.

அவ்வாறே நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை ஒழுங்கமைத்து - உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்களைப் பாதுகாக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த வருட மே தின நிகழ்வுகளுக்கு - கொடூர பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாம் அந்த கொடூர செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருந்தாலும், எதிர்பாராதவிதமாக உலகளாவ ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்கு நாம் முகம்கொடுத்திருப்பதால், இந்த வருடமும் மே தினக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள், மற்றும் நிகழ்வுகள் இடம்பெறாத சூழலே ஏற்பட்டுள்ளது.

எனினும் நியாயமான உரிமைகளுக்காகச் செய்யப்படும் போராட்டம் பலப்படுத்தப்பட வேண்டும். இலங்கை நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் புதிதாக கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிக்கு சர்வதேச தொழிலாளர் தின பிரார்த்தனைகள் பலமாக அமையட்டும்!

இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகின்றேன்.

கோட்டாபய ராஜபக்க்ஷ

No comments: