
மக்களது இயல்பு வாழ்க்கை தற்போதைய காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பின்னடைவினை சந்தித்துள்ளது. அதிலும் தினக்கூலி செய்து சீவியம் நடத்தும் சாதாரண குடும்பங்களின் நிலை பெரும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதை அவதானிக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் அடித்தட்டு மக்களின் நிலை அன்றாட உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதில் பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், பல பொது அமைப்புகள் மக்களுக்கு உலருணவுகளை வழங்கி வருகின்றன. குறித்த உதவியினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் தனது முயற்சியால் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் அடிப்படையில் கனடா பாடுமீன் அமைப்பினால் 1000 குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, இதில் மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் 300 குடும்பங்களுக்கும், கரடியனாறு பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில் 500 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கரடியனாறு பிரதேசத்தில் ம.சுரேஸ்காந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மணிபுரம் கிராமத்தில் 25 குடும்பங்களுக்கும், கரடியனாறு கிராமத்தில் 130 குடும்பங்களுக்கும், கித்துள் சர்வோதய கிராமத்தில் 45 குடும்பங்களுக்குமாக 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
உலருணவுப் பொதிகளினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர உறுப்பினர்கள் து.மதன், த.ராஜேந்திரன், மாநகர ஊடக இணைப்பாளர் அ.ஜனார்த்தனன் மற்றும் ம.சுரேஸ்காந்தன், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிவைத்தனர்.















No comments: