News Just In

4/23/2020 01:13:00 PM

கண்ணபுரம் கிழக்கு கிராமத்திற்கு நிவாரணம் வழங்கவில்லையென மக்கள் விசனம்-பிரதேச செயலாளரின் விளக்கம்

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணபுரம் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு மக்களில் சுமார் 80 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையென மக்களாலும், சமூக வலைத்தளங்களினூடாகவும் விசனம் தெரிவிக்கபட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதன் காரணமாக அன்றாட தினக்கூலி வேலைகளுக்கு செல்லும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனை சீர்செய்வதற்காக அரச, அரசபார்பற்ற நிறுவனங்கள், மற்றும் தன்னார்வ தொண்டர்களினால் நிவாரணம் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

கண்ணபுரம் கிழக்கிற்கு நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநயகியிடம் வினவிய பொழுது அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது;
'எமது பிரதேசத்திற்குள் நாங்கள் சரியான பொறிமுறையினூடாக நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பன பிரதேச செயலகத்தினை உதவியுடன் செயல்படுகின்றன. அதனூடாக சிறப்பான முறையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டம் கட்டமாக நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இதன்படி தற்போது 7056 குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 5000 குடும்பங்களிற்காவது கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.இந்த நிலையில் சில முக்கிய பிரமுகர்கள் பிரதேச செயலகமூடாக கொடுக்காமல், எதுவிதமான அறிவித்தலுமின்றி இரகசியமாக கொடுப்பதாலும், அந்த தரவுகள் அப்பிரிவு கிராம சேவையாளர்களுக்கு வழங்கபடாமையினாலும் அதில் பெரிதும் சிக்கல்களை நாம் எதிர்நோக்குகின்றோம்.

கொடுத்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கெண்டிருக்கின்றனர். இதே பிரச்சினைதான் கண்ணபுரம் கிழக்கிலும் எமக்கு ஏற்பட்டது.

நான்கு பிரமுகர்கள் 80 பேருக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர். மாவட்ட செயலகத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட பெறுமதியை விட குறைவான பெறுமதியுடைய பொதிகளே வழங்கப்பட்டுள்ளன.

உணவுப் பொதிகள் கிடைக்கப் பெறாத நபர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்காக
கண்ணபுரம் கிழக்கிற்கு நானே நேரடியாக சென்று வழங்கியிருந்தேன். உண்மையில் சுமார் 80 குடும்பங்களும் மிகவும் பின்தங்கிய வருமானம் கொண்ட குடும்பங்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் நிவாரணம் கிடைக்காத வாழ்வாதாரம் இழந்த மக்கள் பெரிதும் எதிர்ப்பினை அவ்விடத்தில் காட்டியிருந்தமையினால் நான் அந்த 80 குடும்பங்களையும் தவிர்த்து பெறாத ஏனைய குடும்பங்களுக்கு வழங்கியிருந்தேன்.

நாம் தனிப்பட்ட பிரமுகர்கள் யாரையும் உலர் உணவு பொதிகளைக் கொடுக்க வேண்டாம் என கூறவில்லை. எம்மோடு தொடர்பு கொண்டு எங்களது பொறிமுறையினூடாக கொடுப்பதனால் சிக்கல்கள் இல்லாமல் கெடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றுதான் கூறுகின்றோம்.

இப்பகுதி மக்களுக்கு மேலதிக உலர் உணவு கொடுப்பதற்கு முன்பு, எமது பிரதேசப் பிரிவில் கொடுக்கப்படாமல் இருக்கும் குடும்பங்களிற்கு கொடுத்து விட்டு பின்னர்தான் கொடுக்கலாம் எனவும், பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவித்தார்.

அநாமோதய சமூக வலைத்தளங்களில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அந்த அநாமோதய முகப்புத்தகம் யாரென்பதை எமது சமூகம் அடையாளம் கண்டுவிட்டது எனவும், எமது பிரதேச செயலகம் எப்பொழுதும் இப்பிரதேச மக்கள் நலன் சார்ந்தே செயற்படும்' எனவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: