News Just In

4/17/2020 04:39:00 PM

பொது போக்குவரத்து சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு!?


எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமல் காணப்பட்டால் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகள் மற்றும் மாரக்கங்களில் எச்சில் துப்புதல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், யாசகம் எடுத்தல் ஆகியனவும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும் ஒரு மீற்றர் இடைவௌியை பேணுவதையும் கட்டாயமாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை 2 நாட்களுக்கு ஒரு தடவை கிருமித் தொற்று நீக்கம் செய்வதற்கும் இன்றைய கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான கிருமிநாசினிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினூடாக பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்றாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: