News Just In

4/17/2020 08:44:00 PM

மட்டக்களப்பில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிவைப்பு


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அன்றாடம் தொழில்புரிந்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களை கவனத்தில்கொண்டு அவர்களுக்கு உதவும் முகமாக, உலருணவுப் பொருட்கள் வழங்கும் உதவித்திட்டம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் உதவித்திட்டத்திற்காக "குணம் நம்பிக்கை நிதியம்" வழங்கிய 1.45 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் மூன்று கட்டங்களாக நிவாரண உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு, முதல் இரண்டு கட்ட நிவாரண உதவிகளும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது கட்ட நிவாரண உதவிகள் நேற்று (16) வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மூன்றாம் கட்ட உதவித்திட்டத்தில் குணம் நம்பிக்கை நிதியத்துடன் இணைந்து திவாகரன் சுந்தரலிங்கம் (சுவிஸ்), Dr.M.மகேஸ்வரன் (பிரித்தானியா), முருகப்பன் சேமகரன் (அவுஸ்திரேலியா), உதயசிங்கம் விஜய்காந், செல்வி. பவித்திரா தேவசிங்கன், செல்வி. மதுபாசினி சண்முகராஜா ஆகியோரது 0.27 மில்லியன் ரூபாய் நிதி அனுசரணையில் 450 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் மட்டக்களப்பில் உள்ள பல பிரதேசங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன், குணம் நம்பிக்கை நிதியத்தின் சார்பில் சீனித்தம்பி லீலாவதி அம்மணி மற்றும் மட்டக்களப்பு சமூக அபிவிருத்தி ஒன்றிய அங்கத்தவர்கள் கலந்துகொண்டு மூன்றாம் கட்ட நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர்.

குறித்த உதவி வழங்கும் திட்டமானது கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) என்பவற்றால் மட்டக்களப்பு மாநகர முதல்வர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு அமைய அமுல்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.













No comments: