News Just In

3/13/2020 03:25:00 PM

மட்டு போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் நோயாளியொருவர் அனுமதி! மக்கள் மத்தியில் பதற்றம்!!

(கிருஸ்ணகுமார்)
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் வந்த போரதீவுப்பற்று திக்கோடை பகுதியினை சேர்ந்த 47வயதுடைய நபர் இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு கொரோனாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் 09 பேரைக் கைது செய்தனர்.

குறித்த நபர் கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றின்  கட்டட பணிகளில் சீனா நாட்டவர்களுடன் ஈடுபட்டதனாலும், நோய் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்பட்ட பதற்ற நிலையினை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நோயாளி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: