News Just In

3/18/2020 09:45:00 PM

மட்டக்களப்பில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்!

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நான்காவது நாளாக இன்று (18) மாவட்டச் செயலகத்தில் நியமனப் பத்திரங்களைக் கையேற்கும் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் நாளை வியாழக்கிழமை 19ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

இந்த வேட்புமனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது.
இன்றைய தினத்தில் சுயேட்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தன. இதன்படி...
01. கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி

02. சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

03. இராஜநாதன் பிரபாகரன் தலைமையிலான ஈழவர் ஜனநாயக முன்னணி

04. தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

05. இரம்ழான் முகம்மது இம்ரான் தலைமையிலான சுயேட்சைக்குழு

06. முகம்மது இப்றாகிம் முகம்மது நியாஸ் தலைமையிலான சுயேட்சைக்குழு

நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.

இக்கட்சியில் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையிலான குழு நேற்று (17) வேட்பு மனுவை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்தது.

விளக்கமறியலில் இருக்கும் நிலையில் இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் ஒப்பமிடுவதற்கான அனுமதியினை மட்டக்ளப்பு சிவில் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலேயே அவர் வேட்புமனுவில் கைச்சாத்திட்டிருந்தார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் கந்தசாமி பிரபு தலைமையிலான குழு வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments: