மார்க்கம் சம்பந்தமான விடயங்களில் பள்ளிவாசல்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு வழிமுறைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவிடயமாக அவர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது...
முஸ்லிம்கள் மீது நெருக்குவாரத்தை தருவதற்கான ஏற்பாடாகவே தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வை குழவின் பரிந்துரை முன்வைக்கப்பட்டு அது கடந்த 19ஆம்திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைக்கான குழுவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் தரப்பினரின் ஆளுமை குறித்து கவலைப்படவேண்டியுள்ளது. குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்றாகவே நோக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக 'வக்பு சட்டத்தைத் திருத்தி பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து பிரசங்கங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். முஸ்லிம் இனத்தின் விகிதாசாரத்துக்கு அமைவாக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்' என்ற பரிந்துரை கவனிக்கத்தக்கது.
இது மத சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு பரிந்துரையாகும். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவே நான் பார்க்கின்றேன். நாட்டில் இப்பொழுது விகிதாசார முறைப்படியா அனைத்து விடயங்களும் கையாளப்படுகின்றன என்பதை முதலில் பார்க்கவேண்டும்
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் பலவற்றில் தொழுவதுக்கு இடமின்றி மக்கள் வெளிப்புறங்களில் அமர்ந்து தொழுகின்றனர். இத்தகைய நிலையில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்னவென்று புரியவில்லை. எனவே இந்தப் பரிந்துரை தொடர்பில் மறுபரீசிலனை செய்யவேண்டும்.
மதவழிபாட்டு தலங்களின் எண்ணிக்கையை விகிசார ரீதியில் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அவை அனைத்து மதங்களுக்குக்கும் பொதுவானதாக உள்வாங்கப்பட வேண்டுமே அன்றி இஸ்லாம் மார்க்கத்துக்கு மட்டும் என்ற நோக்கம் முன்னெடுக்கப்படக்கூடாது.
இந்தப் பரிந்துரைகளில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பொது ஆலோசனைகளை நாம் ஏற்றுக் கொண்டாலும் இதனை அதிகம் எதிர்கொள்ளப் போகின்றவர்கள் முஸ்லிம் பெண்கள் என்ற நிலையில் அவர்களை சோதனை செய்வதில் பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
இந்த விடயங்களில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அக்கறை கொண்டு மனித உரிமைகளின் அடிப்படையில் எமது உரிமைகளை நிலைநாட்ட திருத்தங்களை முன் வைக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: