News Just In

2/25/2020 07:45:00 PM

மட்டக்களப்பில் மணல் அகழ்விற்கு புதிய பொறிமுறை விரைவில் அமுலாகும்.


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வரவேற்பு உரையுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான, சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் விஷேடமாக மணல் அகழ்வு தொர்பாக தற்காலிமாக மணல் அகழ்வை இடைநிறுத்த வேண்டும் என்று கடந்த மாதம் அபிவிருத்தக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயம் நடைமுறைக்கு கொண்டுவர முடியாமை குறித்து ஆராயப்பட்டது.

இதில் பிரதேச சபையின் தவிசாளர்கள் தங்களின் அனுமதியின்றி தங்களுடைய வீதிகளை மணல் லொறிகள் பாவிப்பதனால் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் முழுமையாக சேதமாக்கப்பட்டு வருவது குறித்து கவனம் செலுத்தப் பட்டது. இப்பாதைகளை புனரமைப்பதற்கு பிரதேச சபையின் நிதி இன்மை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கும்படி பிரதேச சபைத் தவிசாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பில் புவிசரிதவியல் கணியவள பணியகத்தின் மட்டக்களப்பு பிராந்திய பொறியிலாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் கருத்து தெரிவிக்கையில்,

மணல் ஏற்றுவது தொடர்பாக புதிய ஒரு பொறிமுறையினை மிக விரைவில் முன்னெடுப்பதற்காக தங்களுடைய பணியகம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான சம்பத்தப்பட்ட திணைக்களத் தலைவர்களை இணைத்து ஒரு இணைந்த குழுவினை உருவாக்கி அதனூடாக அனுமதிபத்திரங்களை வழங்குகின்ற நடவடிக்கையை வெளிப்படுத்தல் தன்மையுடன் செயலாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில்,

அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையில் பிரதேச வாசிகளுக்கான அதிகளவான வாய்ப்பினையும் மிகுதியை வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு மணல் அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதெனவும் இந்நடைமுறையினை இரு வாரங்களுக்குள் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள்,

மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபவஞ்சினி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாகாண சபைகளின் பிரதிச் செயலாளர்கள், மற்றும் மாவட்டத் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments: