News Just In

2/12/2020 08:38:00 PM

அரசிடம் இருந்து அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றோம்-பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடலில் முதல்வர்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நேற்று (11.02.2020) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டார்.இந்த சந்திப்பில் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இடையில் பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்...
மாநகர சபையினுடைய செயற்பாடுகள், அபிவிருத்தி திட்டங்கள், அரசியல் நிலைமைகள் மற்றும் மக்களது எதிர்கால எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மாநகர சபையோடு இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் அபிவிருத்தி ஆகிய விடயங்களில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், துறை சார்ந்த நிபுணர்களை எங்களுக்கு தருவித்து மாநகரசபை உத்தியோகத்தர்களின் திறன் விருத்திக்கான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, மாநகர சபையில் எவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைபெறுகிறது என்பது தொடர்பிலும், மத்திய அரசாங்கத்தினுடைய நிதி இங்கு எவ்வாறு வருகின்றது என குறித்த கலந்துரையாடலில் தன்னிடம் உயர்ஸ்தானிகர் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,

கடந்த காலத்தில் தாராளமான நிதியினை பெறக்கூடியதாக இருந்தது. இந்த வருடத்தில் புதிய அரசின் மூலமாக நிதி வளங்களை எதிர்பார்க்கின்றோம். நிதி தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் பாராளுமன்ற தேர்தலின் பின்பே அங்கீகரிக்கப்படும் என நான் நினைக்கின்றேன்.

பாதீடு அங்கீகரிக்கப்படாத நிலையில் நிதி ஒதுக்கீடு என்பது சவாலாக இருக்கும் என நினைக்கின்றேன். சப்பிரிஹம திட்டத்தினை அமுல்படுத்திஅதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டால் அதனை அமுல்படுத்தலாம்.

வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால்தான் இது நடக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அபிவிருத்திகளை நாங்கள் எதிர்பார்கின்றோம். மத்திய அரசு அனைத்து பிரிவினரையும் சரியான முறையில் சமமாக கையாள வேண்டும் என்று நான் வேண்டுகோளை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மாநகர சபையின் முன்னெடுப்புகளான சிறுவர் சிநேக நகரம், பெண்கள் சிநேக நகரம் ஆகிய செயற்பாடுகளை உயர்ஸ்தானிகர் பாராட்டியதாகவும் முதல் தெரிவித்தார்.  



No comments: