கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சீன பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற முடியாதென அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குறித்த சீனப் பெண்ணின் உடல் நிலை தொடர்பான பல பரிசோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.
எனவே குறித்த பெண் தொடர்பாக மேற்கொண்ட மேலும் பல பரிசோதனைகளின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே, அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வந்த 43 வயதான சீனப் பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த 25ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இரத்தப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் முமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சீனாவில் இருந்து அந்த நாட்டின் 3 விமான சேவைகளுக்கு சொந்தமான 3 விமானங்கள் ஊடாக 61 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 50 பேர் சீன பிரஜைகளுடன் ஏனைய 11 பேரும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் சீனாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: