-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் சன சமூக மத்தியஸ்த சபைகளுக்கு மேலதிகமாக நிதி சார்ந்த, புலம்பெயர் தொழிலாளர் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் புறம்பான மத்தியஸ்த பிரிவுகளை உருவாக்கும் திட்டத்திற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ. முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 09.02.2020 மேலும் விவரம் தெரிவித்த அவர்,
தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் சன சமூக மத்தியஸ்த சபைகளின் மூலம் கடந்த ஆண்டில் மட்டக்களப்பிலும் அம்பாறை மாவட்டத்திலும் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிணக்குகளில் சுமார் 65 சதவீதமான பிணக்குகள் மத்தியஸ்தம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5000 பிணக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் சுமார் 6000 பிணக்குகளும் சுமுகமாக மத்தியஸ்தம் செய்யப்பட்டுள்ளன.
மத்தியஸ்த சபைகளின் வகிபாகம் சமூகப் பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிப்பதால் இன்னும் வினைத்திறனான வகையில் சமூகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வு காண்பதற்காக பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக காணிப் பிணக்குகளைக் கையாள்வதற்காக காணி மத்தியஸ்த சபைகள் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் மக்களிடம் இருந்து வரும் பிணக்குகளில் நிதி சார்ந்த பிணக்குகள் அதிகமாக இருப்பதால், மேலதிகமாக நிதி; சார்ந்த பிணக்குகளைக் கையாளும் மத்தியஸ்த சபையும், அதேபோல புலம்பெயர் தொழிலாளர் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் புறம்பான மத்தியஸ்த பிரிவுகளை உருவாக்கும் திட்டத்திற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து சுமார் 14 இலட்சம் பேர் ஆண்களும் பெண்களுமாக இடம்பெயர் தொழிலாளர்களாக மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் புரிவதால் அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்கும் பிணக்குகளும் மத்தியஸ்த சபைகளுக்கு அதிகளவில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதனால் இக்கரிசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: