News Just In

1/04/2020 08:09:00 PM

மட்டு மாநகர சபையில் வெறுமனே கழிவகற்றல் வேலை மட்டும் செய்யவில்லை-முதல்வர் சரவணபவன்


மட்டக்களப்பு மாநகர சபையை நாங்கள் பொறுப்பெடுத்த காலத்தில் இருந்து சகல விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றோம். வெறுமனே கழிவகற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் நின்று விடாது அபிவிருத்தியுடன் விளையாட்டு குழு, கலை நிகழ்வுகளுக்காக கலை கலாசாரக் குழு என ஒவ்வொரு துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றோம் என முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண கௌரவிப்பு விழாவானது பாடுமீன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய முதல்வர் அவர்கள்.

மாநகர சபையின் விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வானது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் வெறுமனே போட்டியில் மாத்திரம் கவனம் செலுத்தாது ஒரு இலக்கு வைத்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.

மட்டக்களப்பில் ஒரு பிள்ளை பாடசாலையில் நடந்த விளையாட்டு போட்டியில், எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை, பரிசில்கள் வழங்கப்படும் போது அவரது பாட்டி எனது பேரனுக்கும் ஒரு பரிசு வழங்குங்கள் என மேடை ஏற்றி விட்டார், அவருக்கு அங்கே ஆறுதல் பரிசு ஒன்றே வழங்கப்பட்டது. 

அன்றில் இருந்து அப் பிள்ளையின் மனதில் எடுத்த உறுதி இன்று அவரை ஒரு தேசிய சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் சாதனையாளராக மாற்றி உள்ளது.

அனைவரும் அப்துல் கலாம் கூறியது போல் உங்களை தூங்க விடாத இலட்சிய கனவு காணுங்கள், தூர நோக்குடன் தேசிய, சர்வதேச மட்டத்திற்கு செல்லுங்கள், நாங்கள் உங்களுடன் பக்கபலமாக இருக்கிறோம், எதிர்காலத்தில் பல அனுசரணையாளர்களை உள்வாங்கி இதை விட பெரிதாக சாதனையாளர்களை கௌரவிப்பதே எனது நோக்கம்.

தற்போது மாநகர சபை வளங்கள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம், தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதனை படைப்பவர்களுக்கு மாநகர சபையில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே எனது எண்ணம், மாநகர சபை மட்டுமல்ல சாதனையாளர்கள் அமைச்சு ரீதியாகவும் வேலைகளுக்கு உள்வாங்கப்பட வேண்டும்.

எங்களது இந்த பதவிகள் நிரந்தரமானவை இல்லை, நாங்கள் செய்யும் இந்த செயற்பாடுகளை இடை நிறுத்திவிடாது வருகின்ற காலங்களிலும் இப் பதவி வகிப்பவர்கள் இதனை தொடர்ந்து செய்தல் வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments: