News Just In

1/18/2020 10:15:00 AM

ரவூப் ஹக்கீமுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசேட விசாரணை ஆரம்பம்

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் விசேட விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக  நேற்று (17) கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதியில் இருந்த வீடொன்றில் தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்த மொஹம்மட் ரில்வான் என்பவரைச் சந்தித்தது தொடர்பிலேயே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடியினை அண்மித்த பகுதியில் குண்டொன்று வெடிக்கச் செய்யப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது.

குறித்த  வெடிபொருட்களைத் தயாரிக்கும்போது, ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாதி ஸஹ்ரானின் சகோதரனான ரில்வான் என்ற குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ரில்வானை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வைத்தியசாலையில் சந்தித்ததாக சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன என்பவர் பொலிஸ் தலைமையகத்தில் செய்திருந்த முறைப்பாட்டை மையப்படுத்தியே, பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: