News Just In

1/15/2020 11:42:00 AM

ஒபரேஷன் தியேட்டருக்குள் புகுந்து பிறந்த பச்சிளங் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்!

தனியார் வைத்தியசாலையில் ஒபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த தெரு நாய் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி பிரசவத்துக்காக திங்கட்கிழமை(13) தனியார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சுகப்பிரசவம் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் சிறிது நேரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என கூறவே ரவிக்குமாரும் சம்மதித்தார். உடனே அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்து சென்றனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை பிறந்தது.

பின்னர் அவரது மனைவியை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். குழந்தை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தது. திடீரென வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கினுள் புகுந்து விட்டதாக சத்தம் போட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் உள்ளே ஓடிச்சென்று பார்த்த போது குழந்தை நாய்க்கடி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அப்போது குழந்தையை கடிக்க மீண்டும் நாய் அருகில் வந்தது. உடனே ரவிக்குமார் கூச்சல் போடவும், வைத்தியசாலை ஊழியர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர்.

பின்னர் குழந்தையை டாக்டர்கள் சோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிக்குமார் பொலிஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வைத்தியசாலை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்தியசாலை இயங்கி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வைத்தியசாலைக்கு சீல் வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: