மீண்டும் மழை அதிகரிப்பினாலும், குளங்களிலுள்ள நீர் திறக்கப்பட்டதாலும் மட்டக்களப்பின் தாழ் நிலப் பகுதியிலுள்ள மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அந்த வகையில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை , காரைக்காடு ,மயிலவட்டவான் , ஈரளக்குளம் , பெரிய வெட்டவான் , இலுக்குப்பொத்தானை , பெருமாவெளி , பாலர்சேனைக் கிராமங்களில் உள்ள மக்களின் தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் , அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் .இடம் பெயர வேண்டிய நிலையிலுமுள்ளனர்.
வேப்பவெட்டுவான் அ .த .க பாடசாலை, காயான்குடா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் . அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் நேரடியாக சந்தித்தார் .
பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிடுகையில்,
அவர்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடக சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுவதைக் காணமுடிந்தது. அத்துடன், உழவு இயந்திரங்கள் , படகுகள் , தோணிகள் மூலமாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபத்தான பயணங்கள் இடம்பெறுகின்றன .
மேலும் அவர் குறிப்பிடுகையில் மகிழவட்டவான், தில்லந்தோட்டம் , வட்டியல் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன . சித்தாண்டி மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெயர்ந்துள்ளனர் .
உன்னிச்சைக்குளம் , உறுகாமக்குளம் போன்ற குளங்களில் இருந்து பெருமளவு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதையும் காணமுடிந்தது எனக் குறிப்பிட்டார் .
இவ் வெள்ள பாதிப்பின் போது அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் , பிரதேச சபை உறுப்பினர் , அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் , கிராம சேவையாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , படையினர்கள் , பொலிஸார் , பொதுமக்கள் ,என்று பலரும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தல் , பராமரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிந்தது. எனவும் குறிப்பிட்டார்.












No comments: