News Just In

12/10/2019 08:37:00 PM

பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு


இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்கின்றது எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை,சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை தராதரங்களை பின்பற்றுவதாக தெரிவிக்கும் நாடுகளிற்கு நீதிநெறி தொடர்பான இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய ஆவணம் ஜோசப் முகாமிற்கு பொறுப்பாக காணப்பட்டவேளை கமால் குணரட்ணவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

குறிப்பிட்ட முகாமில் பாதிக்கப்பட்ட பத்து பேரின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து யுத்தத்தை நிறுத்தவேண்டிய நிலையேற்படுவதை தவிர்ப்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு மே 2019 14 ம் திகதி அப்போதைய பாதுகாப்புசெயலாளரான கோத்தாபய ராஜபக்ச தனக்கும் சவேந்திரசில்வாவிற்கும் உத்தரவிட்டார் என கமால் குணரட்ண தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: