News Just In

11/12/2019 03:03:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கம்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 01ஆம் திகதி வரையும் 74 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஐனவரி 01ஆம் திகதியில் இருந்து இதுவரை 1237 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளனர். இதில் இரண்டு பேர் கடந்தமாதம் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும் ஏறாவூர் பகுதியில் இருந்து ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கலாநிதி வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு வைத்திய அத்தியட்சகர் பிரிவில் இதுவரை 31 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டிருப்பு, ஆரையம்பதி பகுதியில் தலா 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்தவாரம் 74 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருக இடம் கொடுக்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்தி மட்டக்களப்பு மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: