News Just In

11/07/2019 11:12:00 AM

ஏறாவூரில் இடம்பெற்ற பிரதமர் பொதுமக்கள் இடையிலான சந்திப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நாட்டின் ஏனைய மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பது போல மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் அபிவிருத்தியும் அமைதியும் இலங்கையர் என்ற அடையாளமும் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமர் பொதுமக்கள் இடையிலான சந்திப்பு ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் புதன்கிழமை (06.11.2019) மதியம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் "எமது தேவைப்பாடு இனவாதமல்ல அமைதியோடும் அபிவிருத்தியோடும் இலங்கையர் என்ற அடையாளத்தோடும் முன்னோக்கிச் செல்லுதல் என்பது மாத்திரமே. அந்தத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் சஜித் பிறேமதாஸவுக்கு மட்டுமே உள்ளது. சஜித் பிறேமதாஸவுக்கு வழங்குகின்ற வாக்கு ஒற்றுமைக்கும் இலங்கையர் என்ற அடையாளத்துக்கும் வழங்கப்படுகின்ற வாக்காகும். ஆகவே,நவம்பர்16ஆம் திகதி சஜித்துக்கு வாக்களித்து ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவோம்" என்றார்.

இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தின் ஆலிம் நஸீர் அஹமட் " இந்த நாட்டின் சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் ஐக்கியப்படுத்தும் தலைவனாக சஜித் பிறேமதாஸவை ரணில் விக்கிரமசிங்ஹ அடையாளம் கண்டு அவரது தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும்படி மக்களைக் கேட்டுள்ளதால் அதனை சிறுபான்மையினங்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை" என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு முன்னாள் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

No comments: