News Just In

11/26/2026 09:03:00 AM

நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயும்

நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயும்




யாழ். வடமராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்களுக்குப் பொலிஸாரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியின் பல இடங்களில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி முதல் மாவீரர் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாளை வெள்ளிக்கிழமை எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் தீருவில் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடமராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னின்று நடத்துகின்ற ஏற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஏற்பாட்டாளர்கள் அந்தந்தப் பொலிஸ் நிலையங்களுக்கு நேரில் அழைக்கப்பட்டு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தலைமையில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் எவ்விதத் தடைகளும் இல்லை எனவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்கள், கொடிகள் மற்றும் இலச்சினைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தாது நினைவுகூர முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை ஒலிபரப்பாது, பொதுவான பாடல்களை மாத்திரம் குறைவான ஒலி அளவில் ஒலிபரப்பலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் மற்றும் காட்சிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எனவும், நேரடி மற்றும் சமூக வலைத்தளக் கண்காணிப்பின்போது மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்டமை கண்டறியப்பட்டால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸாரால் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: