News Just In

11/18/2026 04:11:00 PM

ஆயுர்வேத மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு அவசியம்; 2029 ஆம் ஆண்டளவில் 5,000 மருத்துவர்கள் வேலையற்றவர்களாகும் அபாயம் – சாணக்கியன் எம்.பி

ஆயுர்வேத மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு அவசியம்; 2029 ஆம் ஆண்டளவில் 5,000 மருத்துவர்கள் வேலையற்றவர்களாகும் அபாயம் – சாணக்கியன் எம்.பி.





ஆயுர்வேத மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை, பாரம்பரிய மருத்துவச் சேவைகளின் பற்றாக்குறை மற்றும் சுதேச மருத்துவ முறைகளை தேசிய சுகாதாரக் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (18.11.2026) பாராளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார்.

இதன்போது, நாட்டின் பல பிரதேசங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஊடாக வழங்கப்படும் முதியோர் பராமரிப்புச் சேவை நிலையங்கள் போதுமானதாக இல்லாததால், முதியவர்கள் தூரப் பிரதேசங்களுக்குச் சென்று சிகிச்சைகளைப் பெற வேண்டிய நிலை காணப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், ஆரம்ப சுகாதாரச் சேவை நிலையங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களின் கீழ் பாரம்பரிய மருத்துவச் சேவைகளுக்கான மருத்துவர்களை நியமித்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணங்களையும் வினவினார். மேலும், தொற்றா நோய்களுக்குச் சுதேச மற்றும் மேற்கத்தேய மருத்துவச் சிகிச்சைகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்கான தேசியக் கொள்கை அல்லது வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொற்றா நோய்கள், மூளை முடக்குவாதம், டவுன் சிண்ட்ரோம், பார்கின்சன் நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சில பாரம்பரிய மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைச் சேவைகளை நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுர்வேத மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை. இதனைத் தொடர்ந்து, சுதேச மருத்துவச் சேவையில் உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மருத்துவர்களுக்கு வதிவிட மருத்துவ உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமை மற்றும் வேலையற்றிருக்கும் சுதேச மருத்துவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான அமைச்சின் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மேலதிக கேள்விகளை முன்வைத்த சாணக்கியன் எம்.பி., ஆயுர்வேத மருத்துவத் துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

ஆயுர்வேத மருத்துவ முறைமை ஊடாக நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பதிலளித்திருந்த நிலையில், வருடாந்தம் சுமார் 200 ஆயுர்வேத மருத்துவர்களே அரச சேவைக்கு உள்வாங்கப்படுவதாகவும், ஆனால் வருடமொன்றுக்கு சுமார் 700 பேர் ஆயுர்வேதப் பட்டப்படிப்பை நிறைவு செய்வதாகவும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக ஆயுர்வேத மருத்துவத் துறையில் பாரிய வேலைவாய்ப்புப் பற்றாக்குறை உருவாகியுள்ளதாகவும், தற்போதைய நிலைமை தொடருமானால் 2029 ஆம் ஆண்டளவில் சுமார் 5,000 ஆயுர்வேத மருத்துவர்கள் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், MBBS மருத்துவர்களுக்கு மாத்திரம் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அவ்வாறான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை முறையற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பதில் இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஆயுர்வேத மருத்துவத் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு கட்டம் கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் அனைவருக்குமான ஆரம்பக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருத்துவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், சுதேச மருத்துவச் சேவைகளை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்த விவாதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

No comments: