News Just In

10/14/2026 01:23:00 PM

இறக்காமத்தில் குறும்படம் மற்றும் நாடகப் பயிலரங்கு

இறக்காமத்தில் குறும்படம் மற்றும் நாடகப் பயிலரங்கு


நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறும்படம் மற்றும் நாடகப் பயிலரங்கு – 2026, கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை கமு/சது/அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம். அமீன் நெறிப்படுத்தினார்.

பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ. நாளிகா தமயந்தியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலரங்கில், நாடகமும் அரங்கியலும் பாட சிரேஷ்ட ஆசிரியர் என். நந்தகுமார் வளவாளராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.

குறும்படத் தயாரிப்பு, கதை உருவாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, நடிப்பு, உரையாடல், காட்சியமைப்பு மற்றும் மேடை வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. இதன்போது, நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் விருதுகளைப் பெற்ற குறும்படங்களும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.

மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், நாடக மற்றும் குறும்படக் கலைகள் மீதான ஆர்வத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எச். நதீறா, பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ. நஹ்பீஸா, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

No comments: