நாட்டில் இனப்பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக ஜன பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மற்றொரு பிக்குவின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே உள்ளது என்று கோட்டே மகாநாயக்க தேரர் இட்டபன தம்மலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகள் சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் சார்ந்த பௌத்த பீடங்களின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு காவி ஆடை அணிவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வரைவு செய்யும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் மற்றும் பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு முன்பாக கடந்த 10 ஆம் திகதி இந்த நடைபயணம் ஆரம்பமானது முதல் நாளில் கடுகன்னாவயையும் இரண்டாவது நாளில் கேகாலையையும் அடைந்தது. இன்று (12) மூன்றாவது நாளாக கேகாலை நகரத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை, வரக்காபொல நகரைச் சென்றடையவுள்ளது.
இந்த நடைபயணம் கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.
இவ்வாறான பின்னணியில், சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடத்தின் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, பிக்கு ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர் சார்ந்த பீடங்கள் அல்லது பிரிவுக்கு அது குறித்து அறிவித்து, அந்த பீடம் அல்லது பிரிவின் கருத்துக்களுக்கு அமைவாக அவரை பகிரங்கமாக வெளியில் அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமான விதிகளை உருவாக்குவது பொருத்தமானது என மகா சங்கத்தினர் யோசனை தெரிவித்தனர்.

இதன் மூலம் இந்தச் சலுகையை எவரும் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் தொடர்பாக உரிய நிகாய அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி ஆடையுடன் வெளியே அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments: