News Just In

10/12/2026 03:49:00 PM

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: 35 குடும்பங்களின் சட்டத்தரணியாக முபாறக் முஅஸ்ஸம் நியமனம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: 35 குடும்பங்களின் சட்டத்தரணியாக முபாறக் முஅஸ்ஸம் நியமனம்



நூருல் ஹுதா உமர்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்ட சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P.) தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுடனான விசேட கலந்துரையாடல் சம்மேளனத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளரும், இவ்வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருபவருமான சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப், வழக்கின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பில் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தினார்.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்வழக்கை மீள முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் தன்னார்வ அடிப்படையில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், நிகழ்வில் பிரதான உரையாற்றினார்.

இதன்போது, வழக்கின் ஆரம்பக்கட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், அவர்களால் முன்வைக்கப்பட்ட சந்தேகங்களுக்கும் உரிய தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில், குறித்த வழக்குடன் சத்தியக்கடதாசி மூலம் இணைந்துள்ள பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தம்மை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தவும், தமது நலன்களைப் பாதுகாத்து வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் சத்தியவோலைகளைத் தமது சுயவிருப்பத்தின் அடிப்படையில் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.

இதற்கமைய, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளைச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமும், அவரால் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படும் ஏனைய சட்டத்தரணிகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலமாக நீதி எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான இந்த அதிகாரமளிப்பு நடவடிக்கை, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


No comments: