News Just In

8/08/2026 04:18:00 PM

சாய்ந்தமருதில் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்

சாய்ந்தமருதில் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

தாய்ப்பாலின் முக்கியத்துவம் தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தாய்ப்பால் ஊட்டல் வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஏபிசி கிளினிக் நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களும் இதில் பங்கேற்று தாய்ப்பால் ஊட்டலின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

கலந்துரையாடலில், குழந்தை பிறந்தது முதல் முதல் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியில் தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களையும் திரவத்தையும் வழங்கும் பூரண உணவாக விளங்குவதாக சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தினர்.

தாய்ப்பாலில் அதிகளவு நீர்ச்சத்து காணப்படுவதால், சாதாரண சூழ்நிலையில் ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மேலதிகமாக தண்ணீர், தேநீர் அல்லது வேறு திரவங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தாய்ப்பாலில் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, தாய்ப்பாலில் காணப்படும் எளிதில் செரிமானமாகும் புரதங்கள் குழந்தையின் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை, லாக்டோஸ் குழந்தைக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுடன், குடலில் பயனுள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக விளக்கப்பட்டது.

குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் சுரக்கும் சீம்பால் (Colostrum), நோயெதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய முக்கியமான கூறுகளைக் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக IgA போன்ற எதிரணுக்கள் குழந்தையை பல்வேறு தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

மேலும், தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் பல்வேறு சுகாதார நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் ஊட்டலைத் தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பிலும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தாய்ப்பால் ஊட்டல் என்பது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் மட்டுப்படுத்தப்படாமல், குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பங்களித்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குவதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அறிவூட்டுவதுடன், குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தாய்ப்பால் ஊட்டலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

No comments: