தற்போது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமையே இதற்கு காரணமாகும்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதான சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொத்மலை பிரதேசத்தில் பதிவான மழைவீழ்ச்சி கடந்த நாட்களை விட தற்போது ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் H.M.J.K.ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments: