News Just In

8/08/2026 06:42:00 AM

துறைமுக நகரம்: 15 பில்லியன் முதலீடு எங்கே? 80,000 வேலைவாய்ப்புகள் எங்கே?இரா .சாணக்கியன் வினா ?

துறைமுக நகரம்: 15 பில்லியன் முதலீடு எங்கே? 80,000 வேலைவாய்ப்புகள் எங்கே?இரா .சாணக்கியன் வினா ?



நேற்றையதினம் (07.08.2026) பாராளுமன்றத்தில், நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ், கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக நான் எழுப்பிய கேள்விகள்:

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் நாட்டிற்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டையும், 80,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த வாக்குறுதிகள் எங்கே நிற்கின்றன?

இன்று எமது இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் திறமையான மனித வளம் வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், துறைமுக நகரம் உண்மையில் இலங்கையர்களுக்கு என்ன பயனை அளித்துள்ளது என்பதை இந்தச் சபை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தத் திட்டத்தின் சந்தைப்படுத்தக்கூடிய 178 ஹெக்டேர் நிலப்பரப்பில், 116 ஹெக்டேர் நிலம் சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் துணை நிறுவனமான "Colombo Port City (Private) Limited" நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமே அந்த நிலத்தை சந்தைப்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.

மேலும், இந்த வலயம் "வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு எந்தவித வரம்பும் இல்லை" என்ற கருப்பொருளுடன் வெளிநாடுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை இந்த வலயத்தில் 77 முக்கிய மூலோபாய வணிகங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக நான் அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக, கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட 116 ஹெக்டேர் நிலப்பரப்பில், இதுவரை எவ்வளவு நிலம் உட்குத்தகைக்கு விடப்பட்டுள்ளது அல்லது வேறு வழிகளில் மாற்றப்பட்டுள்ளது?

அந்த நிலங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்களின் முழுமையான பட்டியல், அவர்கள் சார்ந்த நாடுகள், ஒவ்வொரு குத்தகையின் காலம் ஆகிய விவரங்களை அரசாங்கம் இந்தச் சபைக்கு சமர்ப்பிக்குமா?

அதேபோல், மொத்த நிலப்பரப்பில் எவ்வளவு வீதமான பகுதி இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவிக்குமா?

இரண்டாவதாக, நிலங்களை சந்தைப்படுத்தி அந்த நிறுவனம் இதுவரை ஈட்டிய வருமானம் எவ்வளவு? அதே காலப்பகுதியில், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள உண்மையான வருமானம் எவ்வளவு? இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

மூன்றாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும், கொழும்பு துறைமுக நகரத்தின் மூலமும், முதலீட்டு சபையின் (BOI) மூலமும் மற்றும் பிற வழிகளின் ஊடாகவும் பெறப்பட்ட உண்மையான வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) அமெரிக்க டொலர்களில் எவ்வளவு என்பதை ஆண்டுவாரியாக தெரிவிக்குமா?

நான்காவதாக, தற்போது துறைமுக நகரத்தில் மொத்தமாக எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்?

அவர்களில், இலங்கைப் பிரஜைகள் எத்தனை பேர்? 35 வயதிற்குட்பட்ட இலங்கையர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு பணியாளர்கள் எத்தனை பேர்? என்ற முழுமையான விபரங்களையும் வழங்குமா?

ஐந்தாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டு சபையும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவும் மேற்கொண்ட மொத்தச் செலவினங்கள் என்ன? அதில், சம்பளங்கள்,

வேதனங்கள், நிர்வாகச் செலவுகள், மூலதனச் செலவுகள், அவை சுயமாக ஈட்டிய வருமானம், திறைசேரியிலிருந்து பெற்ற நிதியுதவி,

என அனைத்தையும் தனித்தனியாகச் சமர்ப்பிக்குமா? அதேபோல், ஒரு அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்காக அரசாங்கம் எவ்வளவு தொகையை செலவிட்டுள்ளது என்பதையும் கணக்கிட்டு தெரிவிக்குமா? மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொதுவாகக் குறிப்பிடுவது போல, துறைமுக நகர ஆணைக்குழுவின் சம்பள மற்றும் வேதனச் செலவுகள் முதல் கட்டத்தில் 759 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டத்தில் 679 மில்லியன் ரூபாவும் எனக் கூறப்படுகின்றன.

ஆனால், உண்மையில் துறைமுக நகர ஆணைக்குழுவில் பணிபுரியும் சில உயரதிகாரிகள் மாதத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவிலிருந்து இரண்டு மில்லியன் ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர் என்பது தெரிய வருகிறது.

இந்த விபரங்களை பலமுறை கேட்டும் அரசாங்கம் வெளிப்படுத்துவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தாலும் கூட முழுமையான தகவல்கள் வழங்கப்படுவதில்லை.

இவ்வளவு பெரிய தேசியத் திட்டம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? மக்களின் பணத்தில் இயங்கும் நிறுவனங்கள் மக்களுக்கே தகவல் வழங்க மறுப்பது ஏன்?

மேலும், நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெறும் பல இணையவழி நிதி மோசடிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் சீனப் பிரஜைகள் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. பலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்தத் திட்டம் ஆரம்பத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலக்குகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், 99 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தேசிய நலன், பொருளாதார பாதுகாப்பு, இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் அரசின் வருவாய் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இலங்கைக்கு உண்மையான பயன் அளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே எனது வலியுறுத்தலாகும்.

இந்த நாட்டின் வளங்களும் நிலங்களும் முதன்மையாக இந்த நாட்டின் மக்களுக்கே பயன்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதில் எங்களுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், அந்த முதலீடுகள் இலங்கையின் இறையாண்மை, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் எதிர்கால தலைமுறையின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே அமைய வேண்டும்.

No comments: