
பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக இறப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, குடியிருப்புகளில் கோமா நிலையில் அல்லது ஏற்கனவே மரணமடைந்த நிலையில் மக்கள் சிக்கியிருக்கலாம் என அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை மக்களை மொத்தமாக வாட்டியெடுத்து வருகிறது. மேற்கு ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்குக் காரணமான வெப்ப அலை தற்போது கிழக்கு நோக்கிப் பரவியதால்,
ஞாயிறன்று ஜேர்மனி, செக்கியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை அளவை எட்டியுள்ளது.
ஐரோப்பாவில் 191 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தது 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொண்டனர்; இப்பகுதி முழுவதும் கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், பிரான்ஸ் நிர்வாகம் வெப்ப அலையால் ஏற்பட்ட இறப்புகளைக் கணக்கிடத் தொடங்கியுள்ளது. முந்தைய மாதங்களின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக 1,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரான்சின் தேசிய பொது சுகாதார முகமை தெரிவித்துள்ளது.
இப்புள்ளிவிவரங்கள் முதற்கட்ட தகவல் எனவும்; அவை கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 'இல்-து-பிரான்ஸ்' (Île-de-France) பிராந்தியத்தில், குடியிருப்புகளிலேயே இறப்பவர்களின் எண்ணிக்கையில் மிகக் கடுமையான அதிகரிப்பு காணப்படுகிறது.
பெரும்பாலான இறப்புகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகின்றன; இருப்பினும், இளையோர்களும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபிலிப் ஜூவின் தெரிவிக்கையில், பிரான்சில் இந்த ஆண்டு வெப்ப அலையால் இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றார்.
மேலும், உக்கிரமான வெப்பம் காரணமாக பிரான்சில் தங்கள் குடியிருப்புகளிலேயே கோமா நிலையிலோ அல்லது மரணமடைந்தோ இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை அடுத்த வாரம் வரை கண்டறிய முடியாமல் போகலாம் என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமையன்று கூறியுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனைகளும் அவசரச் சேவைகளும் வரும் நாட்களில் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகவே இருக்கும் என்று பிரெஞ்சுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை வீசிய காலகட்டத்தில் நிலவிய கடும் வெப்பத்தின்போது, 122,000-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் பதிலளித்ததாக பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடக்கு பிரான்ஸின் பெரும் பகுதிகள் கடுமையான இடியுடன் கூடிய புயல் மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டன; இதனால் பலர் காயமடைந்த நிலையில், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றுவதிலும், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் அவசர சேவைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏய்ன் (Aisne) பகுதியில் மின்னல் தாக்கியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன; இதில் லாவோன் (Laon) நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். புயல்களால் மின்சாரம் தடைபட்டது; ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 60,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது
No comments: