
பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவர் புத்திக்கா சுதசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளைப் பாடசாலைகளில் முற்றாகத் தவிர்ப்பதற்கும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி, பின்வரும் உணவுப் பொருட்கள் இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்காக உணவகங்களில் விற்பனை செய்யப்பட மாட்டாது.
சோசேஜஸ், மீட் போல்ஸ், பேக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் விரும்பும் பர்கர், ஹொட் டொக், சப்மரின் மற்றும் பீட்சா போன்ற துரித உணவுகள், கிரீம் பனிஸ், ஜாம் பனிஸ், பேஸ்ட்ரி வகைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிற்றுண்டிகள், உடனடி நூடுல்ஸ், சூப் கட்டிகள், தக்காளி மற்றும் சோயா சோஸ் வகைகள், சுவிங்கம், லாலிபாப், ஜெலி வகைகள், ஐஸ் பாக்கெட் மற்றும் பாடசாலை மாணவர்கள் எளிதில் விரும்பி உண்ணும் அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள், காபனூட்டப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பாக்கெட் பானங்கள் என்பவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை சிறு வயது முதலே தொற்றா நோய்களில் இருந்து பாதுகாக்கவும், அவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.
No comments: