News Just In

6/29/2026 09:17:00 AM

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திகளை ஆய்வு செய்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திகளை ஆய்வு செய்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன
புதிய கட்டண விடுதி உள்ளிட்ட மூன்று பிரிவுகள் திறப்பு – எதிர்கால அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி


நூருல் ஹுதா உமர்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன ஞாயிற்றுக்கிழமை (28) வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இவ் விஜயத்தின் போது, நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டண விடுதி (Pay Ward), தாதியர் நிர்வாக அலுவலகம் (Nursing Administration Office) மற்றும் கண்காணிப்பாளர் (Overseer) அலுவலகம் ஆகியவற்றை டாக்டர் அசேல குணவர்தன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்ட அவர், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள், சுகாதார சேவைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

பின்னர் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் தற்போதைய தேவைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், புதிய உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் மேம்பாடு மற்றும் தரமான சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தனர்.

அவற்றைக் கவனமாகக் கேட்டறிந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியதுடன், வைத்தியசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் சுகாதார அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். தாசிம், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயிஸ், விசேட வைத்திய நிபுணர்கள், கணக்காளர் யு.எல். ஜவாஹிர், பிரதம தாதியர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில், நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் பாராட்டும் வகையில், டாக்டர் அசேல குணவர்தன அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments: