
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகரகம மத்திய மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த, பிலியந்தலை நிவன்திட்டிய பகுதியை சேர்ந்த இசல தஹம் என்ற மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அவரது நண்பர் பலத்த காயமடைந்து களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின்படி, மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அரவ்வல நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வாகனம் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் பலமாக மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாக பிரிந்து சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இருவரும் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், தஹம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஹம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, 400,000 ரூபா பணத்திற்கு பாகங்கள் பிரிக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
விபத்து குறித்து பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: