News Just In

6/30/2026 11:10:00 AM

மேயர்ஸ் கிண்ணம் 2026 கால்பந்து சுற்றுப்போட்டி : சம்பியனானது சாண்டர்ஸ் கழகம்; முத்துவெல வெட்ஸ் இரண்டாம் இடம்

மேயர்ஸ் கிண்ணம் 2026 கால்பந்து சுற்றுப்போட்டி : சம்பியனானது சாண்டர்ஸ் கழகம்; முத்துவெல வெட்ஸ் இரண்டாம் இடம்


நூருல் ஹுதா உமர்
கொழும்பு மாநகர முதல்வர் கிண்ணம் 2026 என்ற பெயரில் நடத்தப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கான 9 பேர் கொண்ட கால்பந்து சுற்றுப்போட்டி கடந்த ஜூன் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பு – 13, ரத்னம் விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ஆர். சேனநாயக்க அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டி, விளையாட்டுணர்வு, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 12ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டித் தொடர், இலங்கையின் முன்னாள் கால்பந்து வீரர்களை ஒன்றிணைக்கும் முக்கிய விளையாட்டு நிகழ்வாக திகழ்கிறது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 முன்னணி முன்னாள் வீரர்கள் கழகங்கள் போட்டியில் பங்கேற்று, இரண்டு நாட்களும் விறுவிறுப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தின. அதேவேளை, முன்னாள் இலங்கை தேசிய கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல வீரர்களும் களமிறங்கியமை போட்டிக்கு கூடுதல் சிறப்பை அளித்தது.

கடுமையான போட்டிகளின் பின்னர் Saunders FC சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. Muthuwela Veterans அணி இரண்டாம் இடத்தையும், Super Star FC மூன்றாம் இடத்தையும், Java Lane SC நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கிளாசிக் பல்ப் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் இஷ்ரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களையும் பரிசுகளையும் வழங்கி வைத்தார். கௌரவ அதிதியாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஷ்வர் உமர் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக ரிஃப்கி பத்ருத்தீன், அல்ஹாஜ் ரியாஸ் மற்றும் அல்ஹாஜ் ஜௌபர் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று போட்டிக்கு சிறப்பூட்டினர்.

40 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் வீரர்களின் திறமைகளை மீண்டும் வெளிக்கொணர்ந்த இப்போட்டித் தொடர், இளம் தலைமுறையினருக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தையும் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, குழு ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் சிறந்த மேடையாக அமைந்தது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளும் நட்புறவு மற்றும் விளையாட்டுணர்வுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், "மேயர்ஸ் கிண்ணம் 2026" இலங்கையின் முன்னாள் கால்பந்து வீரர்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய வருடாந்த விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக மீண்டும் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments: